புதிய அரசிடம் ஐ.டி., ஊழியர்களின் எதிர்பார்ப்புகள்
இந்தியாவில் ஐ.டி., துறை கிட்டத்தட்ட 55 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. முறைப்படுத்தப்பட்ட தனியார் துறை வேலை வாய்ப்பில் இத்துறை முதலிடம் வகிக்கிறது. இதில், 36 சதவீதம் பெண்கள். ஆண்டுக்கு கிட்டத்தட்ட 75,000 கோடி ரூபாய் ஏற்றுமதி வருவாய் ஈட்டுகிறது. சீரான வளர்ச்சி கண்டுவரும் இத்துறை, படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை கணிசமாக நனவாக்கும் அதே நேரத்தில், சவாலான பணிச்சூழலில் ஊழியர்களை ஆழ்த்துகிறது.
ஐ.டி.,யில் வேலை பார்க்கும் இளைஞர் என்றாலே அதிகம் சம்பளம் வாங்குபவர்; கார், சொந்த வீடு வைத்திருப்பவர்; ஆடம்பரமாக செலவு செய்பவர் என்கிற கண்ணோட்டம் தான் பொதுமக்கள் மத்தியில் நிலவு கிறது. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் ஐ.டி., துறை தான் பணிச் சுமையில் முதலிடம் வகிக்கிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 12 மணி நேரம், 'ப்ராஜெக்ட்' முடிவடையும் தேதி நெருங்க நெருங்க போதுமான ஓய்வோ உறக்கமோ இன்றி நாட்கணக்கில் தொடர்ந்து வேலையில் ஈடுபட வேண்டி இருக்கிறது.
இதன் விளைவாக ஏற்படும் உடல்நல பாதிப்பு, மன அழுத்தம் போன்றவை போதுமான அளவு விவாதிக்கப்படுவதில்லை. மேலும், கடந்த பத்தாண்டு களில் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களின் ஆரம்ப சம்பளம் சொல்லும்படியாக உயரவில்லை. சம்பள உயர்வு பெரும்பாலும் உயர்மட்ட நிர்வாகிகளுக்கே சென்று கொண்டிருப்பது எதார்த்தம். லாபம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் கீழ்மட்ட ஊழியர்கள் தான் முதலில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். மேலும், ஐ.டி., துறை பணி பாதுகாப்பு அறவே இல்லாத துறை.
அத்தியாவசிய சேவை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, வீட்டிலிருந்து பணிபுரியும் முறை, ஊழியர்கள், நிர்வாகம் இருவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது. உற்பத்தியும் தடையின்றி நீடித்தது. சமுதாயத்திற்கும் அத்தியாவசிய சேவை கிடைத்தது.
ஐ.ஐ.ஐ.டி., பெங்களூரு மற்றும் ஆஸ்திரேலிய - இந்திய கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின் அறிக்கையை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன் வெளியிட்டார்.
இந்த ஆய்வு, வீட்டிலிருந்து பணிபுரியும் முறை அதிக ஊழியர்களால் விரும்பப்படுகிறது என்று தெரிவிக்கிறது. அதனால், ஆரோக்கியம் உயர்கிறது, வேலைத்திறன் அதிகரிக்கிறது, வேலைக்கும் வாழ்கைக்குமான சமன்பாடு அதிகரிக்கிறது என்று ஊழியர்கள் கருதுகின்றனர். பெண் ஊழியர்கள் தங்களுடைய மகப்பேறு, மாதவிடாய் காலங்களில் பேருதவியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இம்முறையே வேண்டாம் என்றும், சில நிறுவனங்கள் அளவோடு அனுமதிப்பது என்றும் முடிவு செய்துள்ளன.
பயனுள்ள இந்த வேலைமுறையை பல்வேறு நாடுகள் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டம் இயற்றி ஊழியர்களின் உரிமையாக மாற்றியுள்ளனர். அதன் சமூகப் பயனை கணக்கில் கொண்டு இந்தியாவிலும் சட்டப்படி முறைப்படுத்தி தங்களின் உரிமையாக்க வேண்டும் என்று ஐ.டி., ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு பணி விடுப்பு அவசியம் என்கிற கருத்து சமீபத்தில் உலகளாவிய விவாதமாக மாறியிருக்கிறது. சில இந்திய நிறுவனங்கள் தங்களுடைய பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குகின்றன. பசி, உறக்கம் போன்றே இயற்கையாக நிகழும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளை சட்டத்தின் பார்வை இன்று வரை கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஊதியமற்ற விடுப்பாகவோ அல்லது வலிகளை சகித்துக் கொண்டோ பணிபுரியும் நிலையில் தான் பெண் ஊழியர்கள் இருக்கின்றனர். இது பணியிடத்தில் பாலின வேறுபாட்டை நிலைக்கச் செய்கிறது. ஊதியத்துடன் கூடிய பணி விடுப்பை பெண் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு, வேலையின் ஒரு பகுதியை எளிதாக்குகிறது.
இதன் விளைவாக, நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவைப்படும் முன்னுரிமை வேலைகளுக்கு, ஊழியர்களால் அதிக கவனம் கொடுக்க முடிகிறது. அதே நேரம், 10 பேர் தேவைப்படும் இடத்தில் நான்கு பேர் தான் தேவைப்படுகின்றனர். அதனால், ஆட்குறைப்பும் பின்தொடர்கிறது. இந்திய தொழிற் தகராறு சட்டத்தின்படி ஆட்குறைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும், ஐ.டி., நிறுவனங்களில் நடக்கிறது.
ஐ.டி., நிறுவனங்களின் சட்ட மீறல்களைக் கண்டித்து தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கில் திரண்டு ஊர்வலமாகச் சென்று தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளிப்பது அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கைக் கைவிட்டு வலுவாக தலையிட வேண்டும் என்று ஐ.டி., ஊழியர் சங்கங்கள் கோருகின்றனர்.
பிரத்யேகமான வேலைத்தன்மை
ஐ.டி., நிறுவனங்களுக்கென்று பிரத்யேகமான வேலைத்தன்மைகள் உண்டு. அதற்கேற்ற தனித்தன்மையான கொள்கைகளும் உண்டு. எடுத்துக்காட்டாக செயல் திறன் மதிப்பீட்டுக் கொள்கை, செயல்திறன் மேம்பாட்டு திட்டக் கொள்கை, காத்திருப்போர் கொள்கை, வீட்டிலிருந்துபணிபுரிவோர் கொள்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2021ம் ஆண்டு மத்திய அரசு சேவை துறைக்கான நிலை ஆணை வரைவு ஒன்றை வெளியிட்டது. இவ்வரைவில், மேற்கூறிய ஐ.டி., நிறுவனங்களின் தனித்தன்மையான கொள்கைகளுக்கான வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்பது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ஏற்கனவே உள்ள சட்டங்கள் கறாராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், தேவையான இடங்களில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று, அமையவிருக்கும் புதிய மத்திய அரசிடம் ஐ.டி., ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.
பல்லாயிரம் கோடிகளில் அன்னிய செலாவணியையும், பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி தருகின்ற கேந்திரமான ஐ.டி., துறையில், அரசு பரிவுடன் தலையிட்டு பணி சூழலை மேம்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது தானே!
-ஆறுக்குட்டி பெரியசாமி, ஐ.டி., ஊழியர் சங்க கவுரவ தலைவர்,சமூக ஆர்வலர்
வாசகர் கருத்து