ஆ.ராசா தனி தொகுதியில் நிற்கலாமா?
தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் ஆ.ராசா. இரண்டு முறை தனி தொகுதியில் போட்டியிட்டவர். மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர்.
தனி தொகுதி என்பது பட்டியல் இனத்தவருக்கு அரசியல் அமைப்பு சட்டம் தரும் ஓர் அசாதாரணமான உரிமை. இது உண்மையானவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதை நிலைநாட்டுவது அரசின் கடமை.
பட்டியல் இனத்தவர் ஹிந்துவாக இருக்கும் வரை மட்டும் தான் அதற்கான உரிமையை பெற முடியும். வேறு மதங்களுக்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமை மட்டுமே கிடைக்கும். அதாவது ஒருவர் பட்டியல் இனத்தவராக பிறந்திருந்தாலும், அதனால் வரக்கூடிய சலுகைகளை பெற வேண்டுமானால், அவர் ஹிந்துவாக இருக்க வேண்டும்.
இந்த தருணத்தில் தான் ஆ.ராசா ஒரு ஹிந்துவா? அவர் தனி தொகுதியில் போட்டியிடலாமா? என்பது பற்றி சந்தேகம் எழுகிறது.
அளவுகோல் எது?
ஒருவர் கிறிஸ்துவர் என்பதற்கான அடையாளம் என்ன? அவர் ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எனப்படும் 'பாப்டிஸம்' பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழும் தரப்படும். 'பாப்டிஸம்' பெறாமல் ஒருவர் தினமும் 'சர்ச்' சென்றாலும், இயேசுவை வழிபட்டாலும், சட்டப்படி அவர் கிறிஸ்துவர் அல்ல.
அதே போல, ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவ விரும்பினால் 'ஷஹாதா' என்னும் வாக்கியத்தை இரண்டு சாட்சிகளின் முன்பாக கூற வேண்டும். 'ஷஹாதா' என்பது “அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை, முகமது நபியை தவிர வேறு இறை துாதர் இல்லை” என்ற வாக்கியம் தான். இப்படியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நுழைவுச் சடங்கு உள்ளது.
ஹிந்துவிற்கென என்ன இருக்கிறது? தனியாக எதுவுமில்லை. அப்படியானால் ஒருவர் ஹிந்து என்பதற்கு என்ன அடையாளம்? அவரது நடத்தை தான் அடையாளம்.
முதலாவதாக அவருக்கு ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஹிந்து கடவுள்களை நம்ப வேண்டும். குறைந்தபட்சம், ஹிந்து மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கேவலப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்றைக்கூட கடைப்பிடிக்காத ஒருவர் தன்னை ஹிந்து என்று கூறிக்கொள்வது நகைப்புக்கு உரியது.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் நாமக்கல்லில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “நீ ஹிந்துவாக இருக்கும்வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ ஒரு வேசி மகன். நீ ஹிந்துவாக இருக்கும் வரை பஞ்சமன். பஞ்சமனாக இருக்கும் வரை நீ ஒரு வேசி மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ ஒரு தலித், தீண்டத்தகாதவன். உங்களில் எத்தனை பேர் வேசி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் ஹிந்து மதத்தில் இருந்து வெளியேறினால் மட்டுமே இந்த அவமானம் துடைத்தெறியப்படும்,” என்று பேசினார்.
ஆ.ராசா ஹிந்துவா?
இதிலிருந்து இரண்டு செய்திகள் தெளிவாகின்றன. ஒன்று, அவர் ஹிந்து மதத்தை படு கேவலமாக அவமரியாதை செய்துள்ளார். இரண்டாவதாக, 'நான் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டேன், நீங்களும் வெளியேறுங்கள்' என்று, மற்றவர்களையும் அழைக்கிறார்.
தான் ஹிந்து இல்லை என்பதற்கு ஆ.ராசா தெள்ளத்தெளிவாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
மேலும் ஹிந்து கடவுள்களை 'த்துா' என்று உமிழ்ந்து பேசியதும், அவர் ஹிந்து அல்ல என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகவே, கேட்கும் யாரானாலும் நினைப்பர்.
எனவே, ஆ.ராசா பிறப்பால் பட்டியல் இனத்தவராக இருந்தாலும், தான் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதால், பட்டியல் இன ஹிந்துக்களுக்கான சலுகைகளை அவர் இழக்கிறார். எனவே, உண்மையான பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியில் அவர் போட்டியிடுவது சட்டப்படியும், நியாயப்படியும் தவறு.
-பா.பிரபாகரன், எழுத்தாளர்
வாசகர் கருத்து