தேனியில் ஓட்டு எண்ணிக்கையில் வண்ண 'டீஷர்ட்'கள் வழங்க ஏற்பாடு
தேனி: லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து எண்ணும் இடத்திற்கு கொண்டு வரும் கிராம உதவியாளர்களுக்கு தனித்தனியாக பல்வேறு வண்ணங்களில் டி ஷர்ட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. தேனியில் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லுாரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 14 இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகளில் தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி வண்ணங்களில் 'டி ஷர்ட்'கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு நீலம், பெரியகுளம் (தனி) தொகுதிக்கு இளம்சிவப்பு, போடி தொகுதிக்கு மஞ்சள், கம்பம் தொகுதிக்கு பச்சை, சோழவந்தான் (தனி) தொகுதிக்கு வெண்மை, உசிலம்பட்டி தொகுதிக்கு ஆரஞ்ச் நிறத்திலான டி ஷர்ட்கள் வழங்கப்பட உள்ளன. ' 'டி ஷர்ட்'களில் உதவியாளர் எந்த மேஜைக்கான பெட்டியை எடுக்க உள்ளார் என்பதை குறிக்கும் வகையில் எண்களும் அச்சிடப்பட்டிருக்கும்.' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து