நாளை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு, ஓட்டு எண்ணும் பணியில் 252 அலுவலர்கள், அதிக பட்சமாக 23 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 33 ஆயிரத்து 217, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 520, மூன்றாம் பாலினத்தவர் 205 என மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 1942 பேர் உள்ளனர்.
தற்போது நடந்து முடிந்த விருதுநகர் லோக்சபா தேர்தலில் ஆண்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 469, பெண்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 586, மூன்றாம் பாலினத்தவர் 45 பேர் என மொத்தம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 101 பேர் ஓட்டளித்தனர். தொகுதியில் 70.32 சதவித ஓட்டுகள் பதிவானது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டும் எண்ணும் மையமான விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஜூன் 1ல் நிறைவடைந்தது. இதன் முடிவுகள் நாளை(ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில் விருதுநகர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை 14 மேஜைகளில் நடக்கவுள்ளது. இதில் ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் பணியில் இருப்பர்.
மேலும் ஒரு சட்டசபை தொகுதிக்கு 42 பேர் என மொத்தம் 6 சட்டசபை தொகுதிக்கு 252 அலுவலர்கள் ஒட்டு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான பணிக்காக முதல் கட்ட சீரற்ற முறையில் 360 பேர் தேர்வு செய்யப்பட்டு மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சீரற்ற ஒதுக்கீடு பொதுப்பார்வையாளர் முன்னிலையிலும், மூன்றாம் கட்ட ஒதுக்கீடு நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடக்கிறது. ஓட்டுகள் எண்ணும் பணி நாளை காலை 8:00 மணிக்கு துவங்கியதும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் பின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் பதிவான 304 ஓட்டுச்சாவடி ஓட்டுகள், 14 மேஜைகளில் 22 சுற்றுகளிலும், சிவகாசி தொகுதியில் பதிவான 277 ஓட்டுச்சாவடி ஓட்டுகள் 20 சுற்றுகளிலும், சாத்துார் தொகுதியில் பதிவான 286 ஓட்டுச்சாவடி ஓட்டுகள் 21 சுற்றுகளில் எண்ணப்படுகிறது.
அதே போல விருதுநகர் தொகுதியில் பதிவான 256 ஓட்டுச்சாவடி ஓட்டுகள் 19 சுற்றுகளிலும், அருப்புக்கோட்டை தொகுதியில் பதிவான 255 ஓட்டுச்சாவடி ஓட்டுகள் 19 சுற்றுகளிலும், திருமங்கலம் தொகுதியில் பதிவான 311 ஓட்டுச்சாவடி ஓட்டுகள் 23 சுற்றுகளிலும் எண்ணி முடிக்கப்படும்.
இந்த எண்ணிக்கை துவங்கி காலை 11:00 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும். ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் ஐந்து பூத்துகளின் ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்படும். இதையடுத்து இரவு 8:00 மணிக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து