ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள்; இன்று மாலைக்குள் தயார் செய்ய நடவடிக்கை
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை இன்று மாலைக்குள் தயார்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு அடுத்த சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன், 4ல் ஓட்டு எண்ணும் பணி நடக்கிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குள் தலா, 14 மேஜைகள் வீதம், 17 முதல், 22 சுற்றுகளில் ஓட்டு எண்ணிக்கையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஓட்டு எண்ணும் பணிக்கு, 300 அலுவலர்கள், பாதுகாப்பு மற்றும் பிற பணிகளுக்கு, 350க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் பணியில் பங்கேற்க உள்ள வேட்பாளர்களின் முகவர்களுக்கு பாஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், வளாகத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை, தடுப்புகள், உணவு வழங்கல், இணையதள வசதி, ஒலி பெருக்கி, கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைத்தல் என பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர்.இருப்பினும், இன்று மாலைக்குள் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மாதிரி ஆய்வு நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திட்டமிட்டுள்ளார்.
இதனால் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் என ஒவ்வொரு பணியிலும், திட்டமிட்டபடி தயார்படுத்தப்பட்டுள்ளதா என, அந்தந்த துறையினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய உள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து