ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கட்டுப்பாடு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிப்பு
திருப்பூர்;ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் ஸ்மார்ட் வாட்ச் உள்பட எலக்ட்ராணிக் சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதி தேர்தலில், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளன.
போலீசார் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியே ஓட்டு எண்ணிக்கை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வரும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டசபை தொகுதிக்கு, 14 டேபிள் வீதம், திருப்பூர் லோக்சபா தொகுதியில், மொத்தம் 84 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தபால் ஓட்டுக்கள் ஏழு டேபிள்களிலும்; சர்வீஸ் வாக்காளரின் ஆன்லைன் தபால் ஓட்டுக்கள் ஒரு டேபிளிலும் எண்ணப்படுகிறது.
இன்னும் இரண்டு நாளே உள்ளநிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஓட்டு எண்ணிக்கைக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தலைமை முகவர், முகவர்கள் 2,174 பேருக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மையத்துக்குள் வேட்பாளர்கள், தலைமை முகவர், முகவர்கள் எந்தெந்த பொருட்களை கொண்டு வரலாம். எதை எடுத்துவரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
l ஓட்டு எண்ணிக்கை நாளில், வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கை தலைமை முகவர், முகவர்கள், 6:00 முதல் 7:00 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் வந்துவிட வேண்டும்.
l தேர்தல் பிரிவில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவரவேண்டும். அடையாள அட்டை இல்லாத முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
l காலை மற்றும் மதிய உணவு எடுத்து வருவதற்காக, வேட்பாளர்களின் 13 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில், உணவு உண்பதற்காக தனி இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
l முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை விவரங்களை குறிப்பதற்கு, பேனா, பென்சில், பேப்பர் கொண்டுவர அனுமதிக்கப்படும். செல்போன் உள்பட எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் கொண்டு வர அனுமதியில்லை.
l தடை செய்யப்பட்ட பொருட்கள், நுழைவாயிலிலேயே பறிமுதல் செய்யப்படும்.
'ஸ்மார்ட் வாட்ச்'க்கு தடை!
தற்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மொபைல் போனுக்கு நிகராக அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் வாட்ச்களில் இடம்பெற்றுள்ளன. போட்டோ, வீடியோ எடுப்பது, அழைப்புகளை மேற்கொள்வது உள்பட அனைத்துவகையான அம்சங்களும் ஸ்மார்ட் வாட்ச் களில் உள்ளன. அதனால், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுக்கள் வாரியாக ஓட்டுக்களை எண்ணுவதற்கு ஏதுவாக, தலைமை முகவர்கள் மட்டுமாவது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என, வேட்பாளர்களின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், தலைமை முகவர்கள் மட்டும், கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து