நாளை ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்தால் 'ரிசல்ட்'
ஊட்டி;நீலகிரியில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை, 23 சுற்றுடன் முடிவடைகிறது.
நீலகிரியில் கடந்த ஏப்., 19ம் தேதி நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்தது. அதில், ஆறு தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங்க்' ரூமில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.
நாளை, 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் இணைய வழியில் தேர்வு செய்யும் பணி நடந்தது.
அதன்படி, நீலகிரி லோக்சபா தொகுதிக்கு, 470 அலுவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டது. மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு டேபிளுக்கும், 'ஒரு 'மைக்ரோ அப்சர்வர்', ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்,' என, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
84 டேபிள்கள் 23 சுற்று
ஒரு சட்டசபை தொகுதிக்கு, 14 டேபிள்கள் வீதம், மொத்தம், 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக கூடுதலாக, 7 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 107 பவானிசாகர்-(தனி) தொகுதி - 22 சுற்று; 108 ஊட்டி தொகுதி - 18 சுற்று; 109 கூடலுார் (தனி) தொகுதி - 16 சுற்று; 110 குன்னுார் தொகுதி - 17 சுற்று; 111 மேட்டுப்பாளையம் தொகுதி - 23 சுற்று; 112 அவிநாசி (தனி) தொகுதி - 23 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணும் பணியில், 350 ஓட்டு எண்ணும் அலுவலர்கள், 120 நுண்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.
குலுக்கல் முறையில் தேர்வு
ஆறு சட்டசபை தொகுதிகளின், ஓட்டு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் எந்த தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும் என்பது, தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், 4ம் தேதி அன்று, அதிகாலை, கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
வாசகர் கருத்து