Advertisement

ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி

புதுடில்லி: ‛‛ மத்தியில் ‛ இண்டியா ' கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.



நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ' கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து டில்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

மக்கள் தீர்ப்பு



அப்போது கார்கே கூறியதாவது: லோக்சபா தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளித்த முடிவு. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. நடந்து முடிந்த தேர்தல் என்பது மக்களுக்கும் மோடிக்கும் இடையே நடந்த தேர்தல். மோடிக்கு எதிராக மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். மோடிக்கு பெரிய தோல்வி கிடைத்துள்ளது.



தனது பெயரை மட்டும் சொல்லி ஓட்டுக் கேட்ட மோடிக்கு பின்னடைவு. மக்கள் தீர்ப்பை மனதார ஏற்கிறோம். எங்கள் வங்கிக்கணக்கை முடக்கினர். கூட்டணி கட்சி தலைவர்களை கைது செய்தனர். பல இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் ‛ இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ராகுலின் 2 யாத்திரைகளும் இண்டியா கூட்டணி வெற்றிக்கு உதவியது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்றோம்.



காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மோடி குறை கூறி பேசினார். 3வது முறையாக பா.ஜ., வந்தால் அரசியல்சாசனம் திருத்தப்படும் என மக்கள் அஞ்சினர். பா.ஜ.,வின் ஆணவத்திற்கு கிடைத்த தோல்வி. தொடர்ந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுவோம். இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கிடைத்த வெற்றி சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கை



ராகுல் கூறியதாவது: நடந்த தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது. அரசியல் அமைப்பை நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது.அரசியல்சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகவே இந்த லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது. அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பாஜ., மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.



இது அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம். அரசியல்சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ., செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன் வைத்தோம். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.



மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய வீதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளை கூட்டம்



இதனைத் தொடர்ந்து ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சி அமைப்பது தொடர்பாக ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினருடன் நாளை (ஜூன் 5) நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தெலுங்கு தேசம், ஐஜத கட்சியை அழைப்பது குறித்து நாளை ஆலோசித்து முடிவு. ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கும், பா.ஜ.,விற்கும் இடையே மெலிதான கோடு மட்டுமே உள்ளது.



வயநாடு, ரேபரேலியில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் ‛இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

ஆலோசனை



நிருபர்களின் கேள்விக்கு கார்கே கூறுகையில், எங்களின் எல்லா யுக்திகளையும் சொல்லிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்