Advertisement

தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க., கூட்டணி அமோகம்!: அ.தி.மு.க.,பா.ஜ., அணிகள் படுதோல்வி

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், இரண்டாவது முறையாக தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கு பின், 39 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், அக்கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 10; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சிகள் தலா இரண்டு இடங்கள்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன.

தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமையில், இரண்டு கூட்டணிகள் களம் இறங்கின. நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கியது.

மும்முனை போட்டி நிலவிய நிலையில், ஒரு சில தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, தமிழகத்தில் 39, புதுச்சேரி என, 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி அள்ளியுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய போது, ஐந்து தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் முன்னிலை வகித்தன. அதுவும் அடுத்தடுத்த ரவுண்டுகளில் நிலவரம் மாறியது. விருதுநகர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி தொகுதிகளில் இழுபறி நிலை நீடித்தது. இதில், இறுதி வரை தர்மபுரி நிலவரம் மட்டும் தி.மு.க.,வா; பா.ம.க.,வா என்று இருந்தது.

இறுதியில் அந்த தொகுதியையும் கைப்பற்றி, ஒரு இடத்தை கூட எதிர்க்கட்சிகளுக்கு விட்டுத் தராமல், அத்தனையையும் தனதாக்கிக் கொண்டது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அப்போது, அ.தி.மு.க., கூட்டணி, 37 இடங்களில் வெற்றி பெற்று, இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

அதற்கு காரணம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. தோல்விக்கு பின், கூட்டணி இல்லாமல், தமிழகத்தில் வெற்றி பெறுவது கடினம் என்பதை தி.மு.க., உணர்ந்து, 2016 சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, தமிழகத்தில் 38 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அடுத்து, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அதே கூட்டணியை தக்க வைத்த தி.மு.க., இந்த லோக்சபா தேர்தலை நம்பிக்கையுடன் சந்தித்தது.

அக்கட்சியும் தலைமையும் எதிர்பார்த்தது போல, தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன், 2004க்கு பின், அதாவது 20 ஆண்டுகள் கழித்து, தி.மு.க., கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளது.

அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணிகள், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்