நியூயார்க் மைதானத்துக்கு 'ஸ்னைப்பர்ஸ்' பாதுகாப்பு * இந்தியா-பாக்., போட்டிக்கு...

1

நியூயார்க்: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள நியூயார்க் மைதானத்துக்கு, 'ஸ்னைப்பர்ஸ்' படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
'டி-20' உலக கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி நியூயார்க்கில் உள்ள எய்சன்ஹவர் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.
பல்வேறு மாத தேடலுக்குப் பின், 900 ஏக்கர் கொண்ட எய்சன்ஹவர் பார்க் இடம் தேர்வு செய்யப்பட்டது. குளிர்காலத்தில் நியூயார்க்கில் பனி கொட்டும், புல் வளர்க்க முடியாது என்பதால், ஆடுகளம் மட்டும் 'ரெடிமேடாக' ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில், 2023 ஜூன் முதல் உருவானது. ஐந்து மாதத்துக்குப் பின் அங்கிருந்து புளோரிடா கொண்டு செல்லப்பட்டது. பின் சாலை வழியாக மே மாதம் நியூயார்க் கொண்டு வரப்பட்டு, ராட்சத கிரேன் உதவியால் மைதானத்தில் 4 ஆடுகளம் 'பிட்' செய்யப்பட்டன. இங்கு 34,000 பேர் அமர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டியை காணலாம்.
அதிக பாதுகாப்பு
இப்போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதனால் நியூயார்க் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. துாரத்தில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கும் 'ஸ்னைப்பர்ஸ்' படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விமான நிலையத்தில் இருப்பது போல, மைதான நுழைவு வாயிலில் 'ஸ்கேனர்' பொருத்தப்பட்டுள்ளன. 'டிரோன்' தாக்குதலை தடுக்கும் வகையில், தொடர் முடியும் வரை மைதானத்தின் அருகிலுள்ள பார்க்கை மூட உத்தரவிட்டுள்ளனர்.

முதல் மைதானம்
எய்சன்ஹவர் பார்க் மைதான காலரி ஆறு பிரிவுகளாக அமைக்கப்பட்டன. வழக்கமான சிமெண்ட், கான்கிரீட் இல்லாமல், பெரும்பாலும் அலுமினியம், ஸ்டீலினால் குறுகிய காலத்தில் உருவானது. உலக கோப்பை முடிந்தவுடன், இவற்றை பிரித்து விடுவர். இதையடுத்து போட்டிக்குப் பின் பிரிக்கப்படும் உலகின் முதல் கிரிக்கெட் மைதானம் ஆகிறது.

'பிளாக்ஸ்டிக்' மண்
வழக்கமாக அதிக களிமண் கலந்து ஆடுகளம் தயாராகும். பந்துகள் வேகமாகவும், பவுன்சராகவும் வரும். நியூயார்க் ஆடுகளத்திற்கு 60 சதவீத களிமண் தன்மை கொண்ட 'பிளாக்ஸ்டிக்' மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. பந்து வேகம், சுழல் என பவுலிங்கிற்கு கைகொடுக்கும். அதேநேரம் பந்து நன்றாக உயர்ந்து செல்வதால், பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும்.

ரூ. 250 கோடி
எய்சன்ஹவர் பார்க் மைதானம் ரூ. 250 கோடியில் தயாரானது. இருப்பினும் டிக்கெட் விலை, ஒளிபரப்பு வழியில் வருமானம் வந்துவிடும் என ஐ.சி.சி., எதிர்பார்த்துள்ளது. தற்போது டிக்கெட் விலை ரூ. 14,550, ரூ. 25,000, ரூ. 33,250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 1,66,000 வரை டிக்கெட் விற்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளன.

2000 கி.மீ.,
புளோரிடாவில் இருந்த ஆடுகளம் 22 'டிரக்' உதவியால் எடுத்துச் செல்லப்பட்டன. 2 நாள், 2000 கி.மீ., பயணம் செய்து நியூயார்க்கை அடைந்தது.