பரிதாப நிலையில் பாகிஸ்தான் * அமெரிக்காவிடம் தோற்றதால் சிக்கல்

டல்லாஸ்: உலக கோப்பை தொடரில் அமெரிக்காவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, இக்கட்டான நிலையில் உள்ளது. அடுத்து இந்தியா, அயர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் சோபிக்க தவறினால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.
அமெரிக்காவின் டல்லாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், அறிமுக அமெரிக்க அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் சுலபமாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சி முடிவு காத்திருந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159/7 ரன் எடுத்தது. அமெரிக்காவும் 20 ஓவரில் 159/3 ரன் எடுக்க, வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது.
இதில் அமெரிக்கா, ஒரு ஓவரில் 18/1 ரன் எடுத்தது. பாகிஸ்தான் அணி, 13/1 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 'கருப்பு நாள்' என விமர்சிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:
அக்ரம்: விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் கடைசி பந்து வரை போராட வேண்டும். மாறாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோற்றது பரிதாபமாக இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது மோசமான நாள். 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
யூனிஸ் கான்: மோசமான நாளில் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியையும் பாபர் ஆசம் அணியினர், கட்டாயம் வென்றாக வேண்டும்.
மொசின் கான்: என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. உண்மையில் நமது வீரர்கள், அமெரிக்க அணியினரை குறைத்து மதிப்பிட்டு விட்டனர் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளை என்ன விலை கொடுத்தாவது வென்றாக வேண்டும்.

எல்லாம் முடிந்தது
பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில்,'' உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணிக்கு எல்லாம் முடிந்து விட்டது. அடுத்து 'சூப்பர்-8' சுற்றில் நாம் பங்கேற்பதை பார்க்க முடியாது. இது பாகிஸ்தான் வீரர்கள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது,'' என்றார்.

'மினி' இந்திய அணியா...
பாகிஸ்தானை வென்ற அமெரிக்க அணியில் இந்திய வம்சாவளி வீரர்கள் ஆதிக்கம் அதிகம். கேப்டன் மோனன்க் படேல், ஆமதாபாத்தில் பிறந்தவர். 2010ல் அமெரிக்காவில் 'செட்டில்' ஆனார்.
* சூப்பர் ஓவர் வீசிய சவுரப் நேத்ராவல்கர், மும்பையை சேர்ந்தவர். ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றுள்றாளர். தற்போது அமெரிக்காவில் 'சீனியர்' தொழில்நுட்ப வல்லுனர்.
* கடந்த 2012, 19 வயது உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றவர் ஹர்மீத் சிங். மும்பையை சேர்ந்த இவர், அமெரிக்காவில் குடியேறினார்.
* இதேபோல கென்ஜிகே பெற்றோர், தமிழகத்தின் ஊட்டியில் இருந்து அமெரிக்கா சென்றனர். முதல் பெங்களூரு அணியில் இடம் பெற முயன்று, கடைசியில் வாஷிங்டன் சென்றார். தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடுகிறார்.
தவிர டில்லி ரஞ்சி அணிக்காக 7 ஆண்டு விளையாடிய மிலிந்த் குமார், நிதிஷ் குமார், ஜஸ்பிரீத் சிங்கும் இந்திய வீரர்கள் தான்.

அடுத்து இலக்கு
அமெரிக்க அணி கேப்டன் மோனன்க் படேல் கூறுகையில்,'' பாகிஸ்தானை வீழ்த்தியது பெரிய சாதனை. எங்களது அடுத்த இலக்கு இந்தியா, பின் அயர்லாந்து என ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்துவோம்,'' என்றார்.

பாபர் ஏமாற்றம்
பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில்,'' சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறு செய்து விட்டோம். முதல் 6 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் சாய்க்காததும் ஏமாற்றம் தந்தது,'' என்றார்.

ஆசம் கான் ஆவேசம்

முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கான் மகன், ஆசம் கான் 25. போதிய உடற்தகுதி இல்லாத போதும், அணியில் சேர்க்கப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிராக, முதல் பந்தில் 'டக்' அவுட்டாகி திரும்பினர். அப்போது காலரியில் இருந்த ரசிகர்கள் கோபத்துடன் ஏதோ பேசினர். இதனால் ஆவேசம் அடைந்த ஆசம் கான், ரசிகர்களுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டுக் கொண்டே, 'டிரசிங் ரூம்' சென்றார்.

பந்தை சேதப்படுத்தினாரா
அமெரிக்க வீரர் ரஸ்டி தியரான் வெளியிட்ட செய்தியில்,'பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராப், பெருவிரல் நகத்தால் பந்தின் மேல் பகுதியை சேதப்படுத்தினார். இதனால் பந்து 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆனது. ஐ.சி.சி., இதை கவனிக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஓவர்ன்னா
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த, முதன் முறையாக 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. தற்போது பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, அமெரிக்க மக்கள் கிரிக்கெட் குறித்து அதிகம் பேசுகின்றனர், இப்போட்டி குறித்து தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். நேற்று 'சூப்பர் ஓவர்' என்றால் என்ன, அதிகமாக இணையதளங்களில் தேடியுள்ளனர்.