ஆபத்தான நியூயார்க் ஆடுகளம்... * அடுத்தடுத்து வீரர்கள் காயம்

நியூயார்க்: நியூயார்க் ஆடுகளம் ஆபத்தானதாக உள்ளது. பந்துகள் கணிக்க முடியாத வகையில் 'பவுன்ஸ்' ஆனதில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனால், உலக கோப்பை போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் நியூயார்க், நசாவ் கவுன்டியில் உள்ள ஐசனோவர் பார்க் புதிய மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் (ஜூன் 9) உட்பட முக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.
இங்கு நேற்று முன் தினம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. இப்போட்டியில் அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் வீசிய பந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் கை பகுதியை பதம் பார்த்தது. இதனால் 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். தொடர்ந்து லிட்டில் வீசிய பந்து, ரிஷாப் பன்ட்டின் இடது முழங்கையில் தாக்கியது. முன்னதாக பும்ரா வீசிய பந்து, அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டரின் 'ஹெல்மெட்டை' பலமாக தாக்கியது. இவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டதா என பரிசோதித்தனர். மொத்தத்தில் ஆடுகளம் பேட்டர்களுக்கு ஆபத்தானதாக உள்ளது.
புளோரிடாவில் தயாரிப்பு
ஐசனோவர் பார்க் மைதான ஆடுகளம், 'டிராப்-இன் பிட்ச்' வகையை சேர்ந்தது. இதே மைதானத்தில் ஆடுகளம் தயார் செய்யப்படவில்லை. அடிலெய்டு ஓவல் ஆடுகள பராமரிப்பாளர் டேமியன் ஹப் மேற்பார்வையில் புளோரிடாவில் ஆடுகளங்கள் தயாராகின. அங்கு இருந்து 'செமி-டிரெய்லர் டிரக்' மூலம் ஐசனோவர் பார்க் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் 'கிரேன்' உதவியுடன் ஆடுகளம் மைதானத்தில் பொருத்தப்பட்டது. வேறு இடத்தில் தயாரானதால், ஆடுகளத்தின் தன்மை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,''ஆடுகள தயாரிப்பில் குறை உள்ளது. மேற்பரப்பில் பிரச்னை இருக்கிறது. தொடர்ந்து 'ரோலர்' பயன்படுத்தி சமன் செய்ய வேண்டும்,'' என்றார்
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில்,''நியூயார்க் ஆடுகளம் வீரர்களுக்கு பாதுகாப்பானது கிடையாது, '' என்றார்.