சவாலான நியூயார்க் ஆடுகளம் * என்ன சொல்கிறார் ரோகித் சர்மா

நியூயார்க்: ''நியூயார்க் ஆடுகளத்தில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல, மிகவும் சவாலானது,'' என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நியூயார்க்கில் இந்திய அணி 3 போட்டியில் பங்கேற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக 119/10 ரன் மட்டும் எடுத்த போதும், கடைசியில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுடன், 18.2 ஓவரில் தான் 113/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது;
'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது 'ரிலாக்சாக' உள்ளது. நியூயார்க் மைதானத்தில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல, எந்த அணி வெற்றி பெறும் என கணிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலை தான் இருந்தது. இங்கு விளையாடிய 3 போட்டிகளிலும் கடைசி வரை போராடினோம். இங்கு பெற்ற வெற்றிகள், உலக கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையும்.
அமெரிக்காவுக்கு எதிரான இலக்கை 'சேஸ்' செய்வது கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். இருப்பினும் சூர்யகுமார், ஷிவம் துபே சிறப்பான 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமாருக்கு இப்போட்டி வித்தியாசமானதாக இருந்திருக்கும்.
'சீனியர்' வீரர்களிடம் இருந்து இதுபோன்ற ஆட்டத்தை தான் எதிர்பார்க்கிறோம். பவுலர்களை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் உட்பட அனைவரும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மைதானம் கலைப்பு
'டி-20' உலக கோப்பை தொடருக்காக நியூயார்க்கில் நசாவ் கவுன்டி மைதானம், 106 நாளில் தயாரானது. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இல்லை உட்படஆடுகளம் கடும் விமர்சனத்தை சந்தித்தது. எட்டு போட்டிகள் நடந்தன. கனடா அணி 137/7 ரன் எடுத்தது தான் அதிகம்.
இம்மைதானத்தின் கேலரிகள், கான்கீரீட் இல்லாமல், அனுமினியம், இரும்பினால் அமைக்கப்பட்டன. தற்போது இந்தியா-அமெரிக்கா போட்டி முடிந்தவுடன், மைதானத்தை கலைக்கும் பணிகள் துவங்கின. அடுத்த 6 வாரத்தில் ஒட்டுமொத்த பணிகள் முடிந்து விடும். இதன் பின் இங்கு வழக்கம் போல, கோல்ப், கால்பந்து உட்பட பல்வேறு போட்டிகள் நடக்கும். விரைவில் இங்கு புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படலாம்.

யார்... யார்
'சூப்பர்-8' சுற்றுக்கு இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி இடம் பெறும் 'குரூப் 1' பிரிவில் ஆஸ்திரேலியா இடம் பெற்றுள்ளது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகள் இடம் வாய்ப்புள்ளது. இதில் பங்கேற்கும் 3 போட்டியில் 2ல் வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம்.

கும்ளே ஆதரவு
இந்திய அணி 'சூப்பர்-8' சுற்றில் 3 போட்டிகளை வெஸ்ட் இண்டீசில் விளையாட உள்ளது. இங்குள்ள ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இதுகுறித்து இந்திய சுழல் ஜாம்பவான் கும்ளே கூறுகையில்,'' வெஸ்ட் இண்டீசில் இந்திய அணி 2 வேகங்களுடன் களமிறங்கும் என்றால் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங்கை (3 போட்டி, 7 விக்.,) சேர்க்க வேண்டும். சிராஜ் வழிவிட வேண்டும். மூன்றாவது 'வேகத்துக்கு' பாண்ட்யா கைகொடுப்பார்,'' என்றார்.