செல்வப்பெருந்தகை பொதுக்கூட்டம்: ரூ.200 'டோக்கன்' பெற 'லபோதிபோ'
திருப்பூரில் நடந்த காங்., கட்சி பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு, பண பட்டுவாடா செய்ய வசதியாக டோக்கன் வழங்கப்பட்டது.
திருப்பூர், ராயபுரத்தில் காங்., கட்சி பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
'சொன்னபடி' கூட்டத்திற்கு அதிகளவில் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் மூதாட்டிகள் அதிகம் இருந்தனர். அவர்கள் அமர்வதற்கு போதிய நாற்காலிகள் இல்லை. கட்சியினர் கடைசி வரை நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை.
கிடைத்த நாற்காலிகளில், மூதாட்டிகள் அமர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் ஒரு பாட்டி, கட்சி கரை வேட்டி கட்டியவரிடம், 'தம்பி எனக்கு டோக்கன் வரல,' என கேட்க, ' அட கம்முன்னு உட்காருங்கம்மா' என அதட்டி உட்கார வைத்தார்.
இதையடுத்து 'யார் டோக்கன் கொடுக்கிறார்' என்பதை அறிந்து, பலரும் அவரை மொய்த்தனர். அவர் அங்கிருந்து 'எஸ்கேப்' ஆனார். ஒரு வழியாக கூட்டம் முடிந்தபின், 'பணம் இங்க கொடுக்க முடியாது. பொறுப்பாளர் வீட்டுக்கு போய், 200 ரூபாய் வாங்கிக்கோங்க...' என பெண்கள் மத்தியில் தகவல் பரிமாறப்பட்டது.
மூதாட்டிகளுக்கு கட்சி நிர்வாகி ஒருவரின் விசிட்டிங் கார்டுக்கு பின், தொகையை குறிப்பிடாமல், பொறுப்பாளர் பெயரை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டது.
இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் தன் பேச்சின் நிறைவில், 'நான் ஓட்டு கேட்க செல்ல வேண்டியிருப்பதால், உங்கள் அனுமதியோடு இடையிலேயே சென்று விடுவேன்' என்றார். காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேச மைக் முன் வர, வேட்பாளர் சுப்பராயன் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். செல்வப்பெருந்தகை பேச்சை துவங்கியதும், அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் ஆகியோரும் மேடையில் இருந்து இறங்கி, காரில் புறப்பட்டனர்.
வாசகர் கருத்து