சிதோஷண நிலை மாற்றத்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரிப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மக்கள் கோரிக்கை
போடி: வெயிலின் தாக்கம், வெப்ப காற்று அதிகரிப்பு, சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்கள் காரணமாக வாந்தி, வயிற்று போக்கால் தினந்தோறும் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், மாவட்ட பொது சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை நடத்தி, இப்பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்ப நிலையும் பதிவாகி உள்ளது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து உள்ளதால் மக்கள் நிம்மதியாக துாங்கக்கூட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் போடி நகர், கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு வயிற்று போக்கு, வாந்தியும், சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தொடர்கிறது.
வயிற்று போக்கு, வாந்தி காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். வாந்தி, வயிற்று போக்கு ஏற்படுவதை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த சுதாதாரதுறை முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போடி அரசு தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியதாவது:
வெயில் காலங்களில் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அதிக வெப்பம், சூடான காற்று, சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மாறி மாறி ஏற்படுகின்றன. இதனால் உடல்நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி, வயிற்று போக்கு பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. வாந்தி, வயிற்று போக்கால் தினந்தோறும் போடி அரசு மருத்துவமனையில் குறைந்தது 10 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனை தவிர்க்க சர்க்கரை, பால், பிரியாணி, புரோட்டா, அசைவம் இல்லாத உணவாக உண்ண வேண்டும். வெள்ளரி, உப்பு கலந்த எலுமிச்சை ஜூஸ், உப்பு சர்க்கரை கலந்த நீர், பழ ஜூஸ்களை பருக வேண்டும்., என்றார்.
வாசகர் கருத்து