ஓட்டு எண்ணும் பணியில் கவனமாக ஈடுபட வேண்டும்! தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுரை
பொள்ளாச்சி : ''பொள்ளாச்சி ஓட்டு எண்ணும் மையத்துக்குள் செல்போன்கள் எடுத்து வர அனுமதியில்லை,'' என, பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி முகாமில், தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் பேசியதாவது:
ஓட்டு எண்ணும் மையத்தில் அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.ஒவ்வொரு மேஜைக்கும் ஓட்டுகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், ஓட்டுகள் எண்ணும் உதவியாளர் ஒருவர், நுண் பார்வையாளர் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையில் இருந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில், காலை, 5:00 மணிக்கு ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டசபை தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பணி நியமன ஆணை வழங்குவார். ஓட்டு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், ஓட்டு எண்ணும் மையத்தில், காலை, 5:00 மணிக்கு ஆஜராக வேண்டும்.
ஒவ்வொரு மேஜையிலும் ஓட்டு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் (சுற்று வாரியாக) அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மேஜைக்கும், கன்ட்ரோல் யூனிட்களை, 'ஸ்டார்ங் ரூமில்' இருந்து கொண்டு வருவதற்கென நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர்களுக்கு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியாக பிரத்யேக வண்ணங்களின் சட்டசபை தொகுதியின் பெயர் மற்றும் அறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜை எண் ஆகியவை குறிப்பிட்டுள்ள, 'டி - ஷர்ட்' வழங்கப்படும். இதன் வாயிலாக அந்த மேஜைக்குரிய கன்ட்ரோல் யூனிட்களை எளிதில் அடையாளம் காண இயலும்.
காலை, 7:45 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், தயார் நிலையில் இருக்க வேண்டும். காலை, 7:55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில், அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும்.
அதன்பின், ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கும். இதில், ஏதாவது குறைபாடுகள், சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையில் எவ்வித குழப்பமோ, தவறோ நேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும், 14 டேபிள்கள் வீதம், மொத்தம், 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணும் பணிக்கு, 335 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும், 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும்; அதன் பின், காலை, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டும் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து, 17 - 24 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணப்படும், என, தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார்.
வாசகர் கருத்து