காங்., தலைவர்களுக்கு சம்மன் மர்மச்சாவு வழக்கில் திட்டம்
திருநெல்வேலி : திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் 58, மர்மச்சாவு வழக்கில் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அக்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் தனசிங், கடந்த 2ம் தேதி காணாமல் போனார். 4ம் தேதி அவரது வீட்டுத் தோட்டத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
திருநெல்வேலி எஸ்.பி.சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படைகள் விசாரித்தும் தற்கொலையா அல்லது கொலையா என துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் எஸ்.பி. முத்தரசி திருநெல்வேலியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் திருநெல்வேலியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி ,மகன்கள் ஜெப்ரின், மார்ட்டின், மகள் கேத்ரின் ஆகியோர் வந்தனர். மதியம் ஒரு மணி முதல் மாலை 6:30 மணி வரை விசாரணை நடந்தது.
மீண்டும் சம்மன்
ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக இரண்டு கடிதங்களை எழுதி வைத்திருந்தார். மரண வாக்குமூலம் என்ற தலைப்பிட்ட கடிதத்தில் தனக்கு பணம் தர வேண்டிய நபர்களிடமிருந்து மிரட்டல் வரலாம் என இருபதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ .,ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பள்ளி தாளாளர் ஜெய்கர், பணம் கொடுக்கல் வாங்கலில் ஆனந்தராஜா என 20க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஒரு கடிதத்தில் சபாநாயகர் அப்பாவுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை. சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு தயாராக இருப்பதாக அப்பாவு தெரிவித்திருந்தார். எனவே அவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
வாசகர் கருத்து