கட்சி முகவர்களிடம் காண்பித்து தபால் ஓட்டை பிரிக்க யோசனை
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை குறித்த பயிற்சி வகுப்பு, ஈரோட்டில் நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஓட்டுச்சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டாக பதிவு செய்து பெறப்பட்டன. பிற லோக்சபா தொகுதிகளில் ஓட்டை வைத்துள்ள அலுவலர்களின் ஓட்டும், போலீஸார், ராணுவம் உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்களின் ஓட்டுக்களும் தபால் ஓட்டாக பெறப்பட்டுள்ளன.தபால் ஓட்டு எண்ணும் இடத்தில், 8 மேஜை, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், ஓட்டு எண்ணும் உதவியாளர் இருவர், நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தபால் ஓட்டுக்களை அரசியல் கட்சி முகவர்களிடம் காண்பித்து, வேட்பாளருக்கான தனி அறையில் வைப்பதற்கு ஏதுவாக, ஒரே மாதிரியான, 32 அறைகள், தகுதியற்ற ஓட்டுச்சீட்டை வைக்க ஒரு பெரிய அறையும் அடங்கிய மரப்பலகையால் ஆன 'டிரே' வைக்கப்பட்டிருக்கும். அதில் போட வேண்டும். காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டும், 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பதிவு ஓட்டும் எண்ணப்படும். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், (வளர்ச்சி) செல்வராஜ், தேர்தல் தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து